பக்கங்கள்

புதன், 5 அக்டோபர், 2016

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

என்ன இருந்தாலும் நீ ஆம்பளதான்டா!

“திரு’ – வாசகம்!

1

ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள்,
“”இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால்
பிரச்சினையே இருக்காது…”

தாம் அய்ந்தறிவு படைத்ததற்காய்
நிம்மதி பெருமூச்சு விடுகின்றன
அம்மணமாய்த் திரியும்
ஆடு, மாடு, கோழிகள்…



2

பேசுகிறாய்…
“பிரா நூல் தெரிவதால்
என்னைத் தூண்டுகிறது”என்று
பறக்கும் பைக்கின் வெற்றுடம்பில்
பூணூல் தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய்
தகவல் இல்லை!

3

ஒன்றுக்கும்
குனியமுடியவில்லை பெண்,
உற்றுப் பார்க்கிறான்.
என்னத்தைச் சொல்ல!
பால் கொடுக்கும் நாய்
பதறி ஓடுது.

4

வெறித்துப் பார்ப்பதில்
வேறெந்த மிருகமும் இப்படியில்லை…
கருவே கலையும்படி
இருக்கிறதவன் கண் புணர்ச்சி!

5

எதிரே வரும் ஆண் புலி பார்த்து
எந்தப் பெண் புலியும் அஞ்சுவதில்லை,

( Word deleted )

உடனுறையும் பாம்பைப் பார்த்து
எந்தப் பாம்பும் பயப்படுவதில்லை,
பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம்
பள்ளிச்சிறுமியை விட
பயப்படுகிறாள் பெண்.
என்ன இருந்தாலும்
நீ ஆம்பளதான்டா!

6

விளக்குமாறு தொட்டு
வீடு கூட்ட மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

நான் தின்ன தட்டை
நானே கழுவ மாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

பெத்தப் பிள்ளையாயிருந்தாலும்
காலு கழுவி விடமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

முக்கியமா,
என் ஜட்டியை
நானே துவைக்கமாட்டேன்,
ஏன்னா நான் ஆம்பள!

எந்தப் பொண்ணப் பாத்தாலும்
லுக்கு விடுவேன்,
எந்திரிச்சக் கையோட – பெண்ணை
நோட்டம் விடுவேன்,
ஏன்னா நான் ஆம்பள!

ஒன்று தெரியுமா?
வயிற்றிலே உதைத்தப் போதும்
வளர்த்துவிட்டு
உன்னை கருவிலேயே கலைக்காமல்
இவ்வளவுக்கும் பிறகு
சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே
அவ பொம்பள!

கெடுக இப்பாழ் சிந்தை!

7

காவிப் பாம்பு வேதம் ஓதுகிறது,
“அண்ணா” என அழைத்திருந்தால்
அந்த மாணவியை
விட்டிருப்பார்களாம்,
டெல்லி காமுகர்கள்.
அதை உன் சீதை செய்திருந்தால்
ராமாயணமே இல்லையடா!
தொலைந்திருக்கும்
ராம நாமத் தொல்லையடா!


“பையா, பையா” எனக் கை கூப்பி
கதறிய பெண்களை
பர்தாவைக் கிழித்துக் குதறிய
ஆர்.எஸ்.எஸ், மிருகங்களே
யாருக்கு உபதேசம்!

8

போலிசை வைத்து
பொம்பளயைக் காப்பாற்ற போகிறார்களாம்!
லேடிஸ் ஆஸ்டலுக்கு
வாட்ச்மேன் சங்கராச்சாரியா?
மகளிர் மட்டும் பேருந்துக்கு ஓட்டுநர்
நித்யானந்தாவா?
குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!

9

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?
மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!
ஞானிகள், விஞ்ஞானிகள்,
ஏன் உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!
மாமிசத் துண்டல்ல – பெண்
சக மனிதரென்று எண்ணடா!
பாலியல் உணர்வின் ஆண் திமிரை
வர்க்க உணர்வால் வெல்லடா!

10

இறந்தபின்பு தன் கண்களை
தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா,
அவள் கண்களில் விழிக்க
அருகதை ஆவோமா ஆண்கள்!

11

பெரிய திரைகளில்
மனிதக்கறி உரிக்கும்


குத்துப் பாடல்கள்…
சின்னத் திரைகளில்


எண்ணத்தை இசையவைக்கும்
கள்ள உறவு சீரியல்கள்…

நினைவில் வெறியாடும்
‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…
இலவச லேப்-டாப்பில்


விரியும் பாலியல் வலைகள்…
என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்


முதலாளித்துவ வியாபாரிகள்!
இத்தனைக்கும் காவலிருக்கும்


இந்த அரசுதான்
பெண்ணின் பெரும் எதிரி!

12

இது போலி ஜனநாயகம் மட்டுமல்ல
இது காலி ஜனநாயகம்!

இங்கு போலிஸ்டேசன் சுவர்களுக்கும்
காமவெறி கண்ணிருக்கும்…

ராணுவ முகாம்களோ
“தேகப்’ பயிற்சியில் திளைத்தவை.

நீதிமன்றங்களோ
சட்டத்தின் ஆணுறைகளில்
முளைத்தவை.

ஊடகங்களோ

பெண்ணின் சதை விற்கும்
“டைம் பாஸ்கள்”

அரசின் உறுப்புகள் அனைத்தும்

(Word Deleted ) ஆன நாடு இது!

இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!

ரவிக்கை போடுவது தொடங்கி
செருப்பு போடுவது வரை
போராடியே கிடைத்தது!

ஆண்டைகளின் சாதியச் சட்டங்களை
வர்க்கப்போராட்டம் வெளுத்த வெளுப்பினால் தான்
முதலிரவு உரிமையும் கிடைத்தது.

பெற்ற தாயின்
முதல் பாலையும்
பறித்துக்கொண்ட நிலவுடமை ஆதிக்கத்தை
எரித்த வர்க்கத்தீயில் தானடா?
உனக்குத் தாய்ப்பாலும் கிடைத்தது.

நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றம்!
புதிய சமூகத்திற்கான
புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் கர்ப்பம்!

ஆண்மை நீக்கம் எத்தனை பேருக்கு?
அனைத்தையும் சீரழிக்கும்


மறுகாலனியத்தை இந்த மண்ணை விட்டு நீக்கு!

- துரை. சண்முகம்

Thursday, 14 February 2013


பெருமானே பெருந்தலைவர்

அல்ஹம்து லில்லாஹ் ! அகிலத்துப் புகழெல்லாம்
அன்பாலும் அருளாலும் ஈருலகை அரசாளும்
அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !
அருள்தா என்நல்லவனே அதுதான் என் கோரிக்கை !!

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு,
சன்மார்க்க நெறிதந்த சாந்திநபி நாதருக்கு,
’ஸல்லல்லாஹு’ என்ற ஸலவாத்து மலர்தூவி
சங்கையினை சமர்ப்பித்து சபையிதிலே சேருகிறேன் !

அங்காச புரியினிலே, அழகுமலர் சோலையிலே
அருள்மணக்கும் நிலையினிலே வானொலியாம் ஆறினிலே
மங்காத புகழ்படைத்த மாநபியின் திருவரவை
மனமகிழ்ந்து பாடிடவே – கவிக்குயில்கள் வந்திடவே

சங்கை மிகுபுலவர் திரு அன்வர் தலைமையிலே
சாந்தமிகு தென்றலோடு சங்கை ஹாஜி உ.காவும்
அங்கமர்ந்த வேளையிலே நாச்சியார் நற்படைப்பில்
அழகுமிகு கவியரங்கம் ! அருமையுடன் இனி துவங்கும் !

ஒருலட்சம் அதனுடனே, இருபத்து நான்காயிரம்
உயர்வான நபிமார்கள் உலகினிலே அவதரித்தார் !
திருநபிகள் நாதருக்குப் பிறந்ததினம் நாமெடுக்க ,
தகுந்தபல காரணங்கள் தருகின்றேன் கேளுங்கள் !

இருபத்து நூற்றாண்டின் இணையற்ற பெருந்தலைவர்
எம்பெருமான் நபிகளன்றோ? இணையில்லா தியாகியன்றோ ?
அரும்பிறப்பால் நற்குணத்தால் அகிலமெலாம் கவர்ந்து நிற்கும்
அருமைமிகு திருநபியின் மகிமைகளைக் கூறுகிறேன் !

ஒன்றே கால் லட்சத்து நபிமார்கள் கொண்டுவந்த
உயர் வேதம் தவ்ராத்தும் இன்ஜீலும் ஜபூர் – மூன்றும்
குன்றாத புகழுடனே சரித்திரத்தில் நின்றாலும் –
கோமானே நீர்தந்த குர்ஆனே நிலைத்திருக்கும் !

நின்றாலும் குவலயத்தில் நீர்தந்த ஷரீஅத்தை
நாடாளும் மன்னருக்கும், நடமாடும் எளியவர்க்கும்
ஒன்றாக நீதி தரும் ! வளமான வாழ்வு தரும் !!
உலகத்தை ஆண்டுநின்ற உயர்குலத்து மன்னர்களின்

உள்வாழ்வும் வெளிவாழ்வும் ஒவ்வொன்றும் வேறுபடும் !
குலத்தினிலே உயர்குலத்துக் குறைஷியெனப் பிறந்தாலும்
கோமானே உம்வாழ்வில் இரண்டு பக்கம் என்றுமில்லை !
குலப்பெருமை கொண்டவர்கள் கர்வத்தால் மடிந்திருப்பார் !

குணந்தவறித் திரிந்தவர்கள் கேவலத்தால் அழிந்திருப்பார் !
நிலவுக்கும் கலங்கமுண்டு ! நீருக்கும் ‘கலங்கள்’ உண்டு !
நிறைவான பொற்குணமாய் நீங்களன்றி யார்தானுண்டு?
பிறப்பென்னும் இறப்பென்னும் இறைவனிட்ட விதியுண்டு !

பிறப்பினிலே சிரிப்பதுவும், பிரிவினிலே அழுவதுவும்
பிறந்து விட்ட மனுகுலத்தின் பழக்கத்தில் இன்றுமுண்டு !
பெருமானார் பிறந்ததிலே பூமியெங்கும் மகிழ்வுண்டு !

இறந்தபின்பு நபியவரை எண்ணியென்னி வேதனையில்
இருந்திடுவோம் எனப்பெருமான் இதயத்தில் எண்ணினரோ?
இறந்தாலும் இவ்வுலகம் இன்பத்தால் நிலைத்திருக்க
இவ்வுலகில் பிறந்தநாளில் இறந்தபொருள் என்னவென்பேன்?

பெண்பெருமை பேசியவர் விதவையரை மணந்ததில்லை !
பெற்ற அன்னை வாழ்விழந்து விதவையராய் ஆனபோதும்
கண்ணியத்தைக் கொடுப்பதற்கு பிறந்தமகன் துணிந்ததில்லை !
கணவனுக்குப் பின், பெண்ணை வாழவைக்க யாருமில்லை !

கண்மூடித் தன்வாழ்வைக் கணவன் விட்டுப் போனபின்னே
கண்ணியமாய் வாழ்வமைத்து வாழுவதே பெருமையென,
மண்ணகத்தில் நாட்டிவைத்த மன்னவராம் மாநபியை
மதியுலகம் புகழ்கிறது ! மன்னர் வழி தொடர்கிறது !

கருப்புக்கும் வெள்ளைக்கும் கடுகளவும் உறவுமில்லை !
கருப்பினத்து மானிடரைக் காப்பதற்கு யாருமில்லை !
வெறுப்புடனே நிலைகுலைந்து வாழ்வுக்கரை ஓரத்திலே,
வேதனையால் மிருகத்தின் கீழாகக் கிடந்தவரைக்

கரும்பாக உறவுகொண்டு, கண்ணியமாய் பதவி தந்து,
ஹபஷிக்கும் குறைஷிக்கும் கல்யாண உறவு தந்து
அரும்பாடு பட்டயெங்கள் அண்ணலாரின் பெருமையினை
அகிலமெலாம் புகழ்கிறது ! அவர்வழியில் மகிழ்கிறது !

தமதாட்சி நிலைப்பதற்குத் துப்பாக்கி தூக்குவதும்
தன்னாட்சி மலர்வதற்கு பெருயுத்தம் நடத்துவதும்
திமிரான போக்குக்கு இவ்வுலகின் அடையாளம் !
திருநபியின் வாக்குக்கு இவையெல்லாம் பெருமாற்றம் !

சமதர்ம சமுதாயம் அமைப்பதற்கும் தளைப்பதற்கும்
சர்வாதி காரங்கள் சாய்வதற்கும் சாவதற்கும்
அமுதான நபிவாழ்வு அற்புதமாய் இருக்கையிலே,
அடுத்தடுத்துப் புதுத்திட்டம் போடுவதில் பொருளென்ன ?

அணுவாயிரம் தூக்கி அடுத்தவனை மிரட்டுவதும்
ஆகாயம் மேல்பறந்து உளவுகளை நடத்துவதும்
கணங்கணமாய் நிம்மதியை இழந்துவிட்டு இருப்பதுதான்
கண்ணியமா ? கவ்ரவமா ? வல்லரசு இலட்சனமா?

பணவாயு தம்மென்ன ? பதவியென்ன ? பெருமையென்ன ?
பண்புடனே பரிவுடனே உலகெல்லாம் வலம்வந்து
 பணிவுடனே பெருமானார் பாதையிலே நாம் நடந்தால்
பாரெல்லாம் நம் சொந்தம் ! பாசமழை தினம்பொங்கும் !

ஒருமொழிக்கும் மறுமொழிக்கும் ஓயாமல் ஒரு சண்டை !
இருமண்ணை ஒரு மண்ணாய் இணைப்பதிலே மறு சண்டை !
கருநிறமும் செந்நிறமும் காலமெல்லாம் நிறச்சண்டை !
கடல்சேரும் நீருக்கும் நதிகளுக்கும் நிதம் சண்டை !

இருபதுக்கும் மேலான நூற்றாண்டு கழிந்தாலும் –
இச்சண்டை எங்கெங்கும் நாடெங்கும் நடப்பது ஏன் ?
அருமை நபி நாதர்வழி நடப்பதற்கு நாமிசைந்தால் …
அனைத்துலகச் சண்டையெலாம் அக்கணமே நின்றுவிடும் !

பெரும் ஐ.நா சபைகளினால் அடங்காத காரியத்தை
பேரிறைவன் திருத்தூதர் அன்றைக்கே முடித்து வைத்தார் !
பெருமானார் சபையினிலே பேசாத செய்தியில்லை !
பிரச்சனைக்கு வந்ததெல்லாம் முடிவின்றிப் போனதில்லை !

பெருமையுடன் பாருலகம் பவனிவர வேண்டுமென்றால்
பெருமானார் பணிவுடனே வாழ்ந்தவழி வந்தால் போதும் !
பெருமானே பாருலகம் முழுமைக்கும் வழிகாட்டி !
பெருமையுடன் முடிக்கின்றேன் ; அவர்வாழ்வை நிலைநாட்டி !

 கவிஞர் மௌல(முதுவைக் வி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ)
( ஜுன் 2000 ல் மலேசிய வானொலி 6 ல் மவ்லிது ரசூல் சிறப்புக் கவியரங்கில் வழங்கிய கவிதை )

Sunday, 4 March 2012


இயற்கையும் செயற்கையும்

இயற்கையில் நானறிந்தது இரு வகை
ஒன்று தானாகவே அமைந்த இயற்கை
மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை
எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை

பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால்
வீணே காரியம் நிறுத்துவது செயற்கை
வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை
ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம்

எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின்
சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை
மனதில் வெள்ளையை போற்றும் மனிதன்
உடையில் வெள்ளையை தரித்திரம் என்கிறான்

கல்லில் கால் தடுப்பது இயற்கை
முள்ளைபோல் உதறாமல் அல்லாடுவது செயற்கை
புல்லுருவிகள் கோள் சொல்வது இயற்கை
புல்லைபோல் எறியாமல் தோள்சுமப்பது செயற்கை

காக்கை கரைவது இயற்கை
விருந்தை எண்ணி கருமி கரைவது செயற்கை
மூக்குக் கண்ணாடி உடைவது இயற்கை
மூக்கே உடைந்தது போல் அலறுவது செயற்கை

தலையில் பல்லி விழுந்தால் இயற்கை
தலையே போனதுபோல் அழுதால் செயற்கை
ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்கள் – இயற்கை
அதில் சில அதிர்ஷ்டம் என்பது செயற்கை

செவ்வாய் தோஷம் - எதிர்காலத்தின் மோசம்
தோஷக்காரர்களின் வாழ்வே நாசம்
அறிவுக்கே ஒவ்வா ஒரு கோஷம்
ஆயுள் ரேகை கட்டை – அது இயற்கை
வாழ்வு குட்டை – இது செயற்கை

விமானத்தில் பிணமானவர்களைக் கேட்டேன்
புயலில் சுயம் இழந்தவர்களை படித்தேன்
கடல் நீரில் உடல் போனவர்களை வாசித்தேன்
சுனாமியில் சின்னாபின்னமானவர்களைக் கண்டேன்

அனைவரின் ஆயுள் ரேகை குட்டையுமில்லை
செவ்வாய் தோஷமுமில்லை
அதிர்ஷ்ட எண்களும் ஒன்றிலிருந்து ஒன்பது வரை
இயற்கை அளித்தது சிம்மாசன இருக்கை
மாற்றவில்லை மனிதன் தன் சிந்தனை போக்கை

Wednesday, 9 November 2011


செவி கொடு; சிறகுகள் கொடு!

(தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் - Cell No. : 9444272269)


இறைவா!


பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.


அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை.


சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டிவரும் நான் – வரம்பு மீறல்களைக் கண்டால் வாள் முனையாகி விடுகிறேன்.


என் சொற்கள் சும்மாவே இருக்கின்றன; என் சுவடுகள் மெதுவாகவே பதிகின்றன; ஆனாலும் என் சுழற்சிகள் எப்போதாவது சுனாமியின் எழுச்சியாகிவிடுவதை உணர்கின்றேன்.


நீ இருப்பது பொறுமையாளர் பக்கம் அல்லவா ! என்னையும் அப்பக்கம் முன்னிலைப்படுத்த உன் கண்ணிய அருளுக்காக கையேந்துகிறேன்.


இறைவா!


தாமரை தண்ணீரில் பூப்பதுபோல என்னையும் சகிப்புத் தன்மைக்குள் தடம் பதிக்க வைப்பாயாக!


வாழை எளிமைக்குள் வசிப்பதைப் போல என்னையும் இந்த இயல்புக்குள் இடம்பெற வைப்பாயாக!


தென்னை உயரத்துக்குள் காய்ப்பதைப்போல என்னையும் உச்சத்தில் சரங்கொள்ள வைப்பாயாக!


மல்லிகை வாசனைக்குள் உவகை கொள்ள வைப்பாயாக !


என் கோரிக்கைகள், கோஹினுர் வைரங்களுக்காக அல்ல, உன் எச்சரிக்கைகளின் உச்சரிப்புக்காகவே !


இறைவா!


நீ நினைத்தால் உப்புக் கல்லையும் வைரக்கல்லாக உயர்த்தி விடுகிறாய்.


நீ விரும்பினால் செப்புக் காசையும் தங்கக் காசாகச் செல்லுபடியாக்கி விடுகிறாய்.


நீ சினந்தால் கோபுரங்களையும் குப்பை மேடாக குறுகிடச் செய்து விடுகிறாய்.


நீ அரவணைத்தால் வெறும் ஈயையும் தேனீயாக விளங்க வைத்து விடுகிறாய்.


தொந்தரவு தராத தூய உறவுகளை நிலைக்கச் செய்து போதும். ஆதரவு தருகின்ற அன்பான நட்புகளை அருகிருக்கச் செய், அதுபோதும்.


இறைவா!


சகலமும் அகலட்டும். உன் அருள் மட்டும் இருக்கட்டும்.


உலகமும் துலங்கட்டும். உன் மறுமையும் விளங்கட்டும்.


மாறான வழி செல்ல எனக்குள் பயம் பிறக்கட்டும். நேரான வழிவாழ எனக்கு ஜெயம் கிடைக்கட்டும்.


அடியார்களின் வேண்டல்களை அதிகம் விரும்பும் நீ, இந்த எளியவனின் வேண்டல்களை, விண்ணப்பங்களைக் கிடப்பில் போடாமல் உடனடி உத்தரவிடுவாயாக.


பிரபஞ்சப் பேராளனே, இந்தச் சிறுபிள்ளையின் வேண்டல்களுக்குச் செவி கொடு; சிறகுகள் கொடு;


என் வேண்டுகோள்,


என் வாசல்களில் கழுதைகள் கத்த வேண்டாம், சேவல்கள் கூவட்டும்.


என் நேசங்களில் வான்கோழிகள் வசப்பட வேண்டா, கோலமயில்கள் தோகை விரியட்டும்.


என் பாசங்களில் வேப்பங்காய்கள் வேண்டாம், வெள்ளரிக்காய்கள் வரட்டும்.


நான் தடுமாறுவதும் இல்லாமல் தடம் மாறுவதும் இல்லாமல் சமுதாயத்தில் நடமாட விரும்புகிறேன்.


அடைமழை பெய்கின்ற அந்த வேளைகளில் குடையொன்று கொடு, அதுபோதும்!


பணமுடை ஏற்படுகின்ற அந்தத் தருணங்களில் தனமுடையவர் நட்பைத்தா அது போதும்!


நெருக்கடியான அந்த நேரங்களில் உருப்படியான எண்ணங்களை ஈ. அதுபோதும்!


என் வரும்படிகள் நன்றாய் வரும்படிச் செய், அதுபோதும்.


விழாக்கால தள்ளுபடி வியாபாரம் அறிவிக்கும் போதும், வாங்கும்படி என்னை வை, அதுபோதும்.

Wednesday, 7 September 2011


மனைவியை புரிந்து கொண்டாலே

மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி


சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து


இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
சொல்லொண்ணாப் பொறுமையை நெகிழ்ந்து யோசி
சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி


“கவியன்பன்” கலாம், அதிராம்படினம்

யாப்பிலக்கணம்: காய், காய், மா, தேமா(அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும்
எண்சீர் கழிநெடிலடி விருத்தம்

Wednesday, 13 July 2011


மலிக்காவின் பிரிவின் துயர் (கவிதை)

எனது கவிதை பிரிவின் துயர் கனடாவில் வெளியாகும் தங்கத்தீபம் வாரப் பத்திரிக்கையில் 26-05-11அன்று வெளிவந்துள்ளது

அடிவயிற்றில்
அமிலம் சுரக்கும் உணர்வு!
நெஞ்சுப் பகுதிக்குள்
நிலநடுக்கம் வந்த அதிர்வு!
தொண்டைகுழியில்
துளிநீரின்றி துவழும் தவிப்பு!


இலைகள்
கிளைகளைவிட்டு உதிர்வதுபோல்
இதயத்தை விட்டு
ஏதோ நழுவதுபோன்றொரு துடிப்பு!

நடந்தவைகள் அனைத்தும்
நினைவுகளாகி துயர் தருதே
இதுதான் பிரிவின் வலியா!
இதயமது
இல்லாதது போலாகுதே!
இதுதான் பிரிவின் துயரா!

பூக்களின் வாசத்தை
நுகரும் நெஞ்சம்
சிறு முள்குத்தலில் துடிப்பதுபோல்
பாசத்தின் பிடிப்பை
பற்றிக்கொள்ளும் மனம்
சிறு பிரிவில்கூட துடிக்கிறதே!

வாழ்க்கையில் பல பிரிவு
சில பிரிவு சிலாகிக்கிறது
சில பிரிவு சிக்கலாக்கிறது
சில பிரிவு சிந்திக்க வைக்கிறது
சில பிரிவு கண்ணீர் சிந்த வைக்கிறது


பிரிவுகளின் பட்டில்
பல வகையிருந்தாலும்
அதன் வலிகளின் ரணங்கள்
ஆழ்மனதை
காயப்படுத்தாமல் இருப்பதேயில்லை!

அதனால்தான் என்னவோ
எந்நிலையிலும் எப்பிரிவையும்
எந்த உள்ளமும்
ஏற்க விரும்புவதேயில்லை!...

நன்றி
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
http://niroodai.blogspot.com

Sunday, 3 July 2011


உன் கண்ணால் நான் பார்க்கிறேன்

விளக்கேற்றுங்கள்
வெளிச்சத்தை அறியாத
என் விழிகளில்

பார்வையற்ற எனக்குப்
பரிசளியுங்கள்
பகலை

மரணம்
உங்களுக்குத்தான்
உங்கள்
கண்களுக்கல்ல

பிறருக்குக்
கண்ணாடியாய் இருப்பதே
பெருமைக்குரியது.
நீங்கள் என்
கண்ணாகவே இருங்களேன்…

நீங்கள்
கண் மூடிய பிறகும்
உங்கள் கண்கள்
திறந்து கொள்ளட்டும்
என் முகத்தில்
இந்த உலகை
எத்தனைக் காலம் நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்…

இறந்தபின் கண்களை
இரவல் தாருங்களேன்…
நானும் பார்த்து
நனைகிறேன் இதயம்.

செத்தும் கொடுத்தவன்
சீதக்காதி மட்டும் தானா?

உங்களுக்கும் அந்த
கௌரவம் தருமே
கண்தானம்
--கவிஞர் மு. மேத்தா

Thursday, 30 June 2011


நான் மட்டும் தனியாக..

பட்டம் வாங்கியதும்
சுற்றித் திறிந்தேன்
இறக்கைக்கட்டி!

அடங்காப் பிள்ளையாக
இருந்தாலும்
அம்மாவுக்குசெல்லமாக!

கடவுச் சீட்டு
கையில் வந்தது
கனவுகள் கலைந்தது
கடமைகள் பெருத்தது!

திட்டித் தீர்க்கும் தந்தையோ
தட்டிக்கொடுத்தார்!

கொஞ்சும் அம்மாவோ
குழந்தையானாள்
அழுவதில் மட்டும்!

வம்புச் செய்யும்தம்பியோ
தேம்பி அழுதான்!


அடிக்கடி அடிக்கும்அக்காவோ
முத்தமிட்டால்;
நெஞ்சத்தை தொட்டுவிட்டாள்!

என்றுமே அழுததில்லை
அன்று நான் கண்டதுபாசம்
எனை வென்றது;

தடுக்க முடியாமல்
தாரைத் தாரையாக
கண்ணீர் என்னைக் கடந்தது!

ஒட்டி உறவாடிய நண்பர்களோ
கட்டித்தழுவி சென்றார்கள்!

இப்போதுநான் மட்டும் தனியாக
என்னைப் போல் இருப்பவர்கள்
இங்கே துணையாக!

வருமானத்திற்காக
வளைகுடாவில் செரிமாணமாகாத
நினைவுகளுடன்;
ஊர்ச்செல்லும் கனவுகளுடன்!

Thanks & Regards..? A.R. Mohamed Sadiq

Friday, 8 April 2011


நேரமில்லை! நேரமிருக்கிறது!

தொழ நேரமில்லை!

ஓத நேரமில்லை!

பசியாற நேரமில்லை!

படிக்க நேரமில்லை!

தூங்க நேரமில்லை!



பர பரவென்ற வேலையால்

பறந்து கொண்டு இருக்கிறேன்!

பணம் உண்டு பையில்

மதிய உணவு இல்லை கடையில்

நேரத்தில் சாப்பிட நேரமில்லை!





படைத்தவனை நினைக்க நேரமில்லை!

பண்பாக இருக்க நேரம் நேரமில்லை!

பழகியவனை பார்க்க நேரமில்லை!

மனைவியிடம் பேச நேரமில்லை!

மக்களிடம் பேச நேரமில்லை!

பள்ளி விட்டு வரும் பிள்ளையை

பாசத்தோடு கொஞ்ச நேரமில்லை!



தாயை கவனிக்க நேரமில்லை!

தந்தையை கவனிக்க நேரமில்லை!

உற்றாரை கவனிக்க நேரமில்லை!

ஏழை வரி கொடுத்து

ஈட்டிய செல்வத்தை

தூய்மையாக்க நேரமில்லை!



நேரமிருக்கிறது!



மனிதா நேரமிருக்கிறது!

உயிர் பிரிய நேரமிருக்கிறது!

மண்ணறைக்கு செல்ல நேரமிருக்கிறது!

மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது!

நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது!

தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது!



மண்ணறை அழைக்கிறது

நான் தனி வீடாவேன்

புழு பூச்சிகளின் பிறப்பிடமாவேன்

நல்லவர்களுக்கு நிம்மதியளிப்பேன்

தீயவர்களுக்கு நோவினை தருவேன்!

நன்மை தீமை பிரித்தறிந்து

மண்ணறையில் கேள்விக்கும்

மண்ணறையின் வேதனைக்கும்

நேரமிருக்கிறது!



மறுமை கேள்வி கேட்கப்படும் நாள்!

மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்!

மண்ணாகி இருக்கக் கூடாதா? நான்

மறுமையை சந்திக்காமல் இருந்திருப்பேனே!

மனிதன் அலறும் நாளுக்கு நேரமிருக்கிறது!



தந்தையை கண்டு மகன் ஓடுவான்!

மகனை கண்டு தந்தை ஓடுவான்!

மனைவியை கண்டு கணவன் ஓடுவான்!

கணவனை கண்டு மனைவி ஓடுவாள்!

நண்பனை கண்டு நண்பன் ஓடுவான்!

எங்கே ஓடுவார்கள்! நன்மையை தேடி!

மறுமையில் ஓட நேரமிருக்கிறது!



மறுமையில் விவாதம்

மனைவியிடம் கணவன்

உனக்கு வாரி வழங்கினேன்

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

மனைவி ஒத்துக்கொள்வாள்

நீங்கள் சிறந்த கணவர்தான்

எனக்கும் நன்மைதான் வேண்டும்

பாசமிகு கணவனை பிரிந்து

வெருண்டு ஓடுவாள்

ஓடுவதை காண நேரமிருக்கிறது!



பெற்ற மக்களிடம் ஓடுவான்

பெற்றெடுத்த மக்களே!

நான் சிறந்த தந்தையல்லவா!

துன்பம் தொடாமல் அனைத்து

வளங்களையும் தந்து ஆளாக்கினேன்!

உன் நன்மையிலிருந்து

எனக்கு கொஞ்சம் கொடு

பிள்ளைகள் ஒத்துக்கொள்வார்கள்!

நீங்கள் சிறந்த தந்தைதான்

எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்!

தந்தையிடம் இருந்து

வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்!

காட்சிகளை காண நேரமிருக்கிறது!



உலகைப் படைத்தவனின் கோபம்

உலகம் முழுவதிலும்

அழிவுகள் சிறிது சிறிதாக! பெரிதாக

அழிவுக்கும் நேரமிருக்கிறது!



மனிதனுக்கோ

மறுமை பயம்

மனதில் இல்லை!

சகோதரச் சண்டை,

உடன்பிறந்தார் சண்டை

குலச்சண்டை,

தெருச்சண்டை,

சம்பந்தி சண்டை,

குழந்தைகள் சண்டை,

அடுத்தவன் வீட்டின்

இடத்தை அபகரித்த சண்டை

படிப்பில், அறிவில், ஆற்றலில்,

பணத்தில், அழகில், குலத்தில்

பெருமை, ஆணவம் மேலோங்க

பிறரிடம் ஏளனச்சண்டைகளுக்கு

நேரமிருக்கிறது!



மனிதர்களே பாசமும்

கேள்விக்குறியாகும் நாள்!

உங்கள் செல்வமும்

பலன் தர முடியாத நாள்!

எந்த பரிந்துரையும்

ஏற்றுக் கொள்ளப்படாத நாள்!

இம்மை, மறுமையின் அதிபதி

வல்ல அல்லாஹ்!

நீதி வழங்கும் நாள் -அந்த

மறுமைக்கு நேரமிருக்கிறது!





மண்ணறைகளைச்

சந்திக்கும் வரை

அதிகமாகத்(செல்வத்தை)

தேடுவது உங்கள்

கவனத்தைத்

திருப்பி விட்டது.

பின்னர் அந்நாளில்

அருட்கொடை பற்றி

விசாரிக்கப்படுவீர்கள்.

(அல்குர்ஆன்:102:1,2, 8)



அலாவுதீன்.S



Source : http://adirainirubar.blogspot.com/2010/12/blog-post_13.html

Thursday, 10 February 2011


சின்ன குழந்தையாகவே ...இருந்திருக்கலாம் ....ல

"கன்னத்தில் வைக்கும்
திருஷ்டி போட்டு ....
அழுதால் சாப்பாடு .....
அடிக்கடி முத்தங்கள் ...
நிறைய செல்ல பெயர்கள் ....
நீண்ட உறக்கம் ....
யாரும் தூக்கி
வைத்துக் கொள்வார்கள் .....
தத்தி தத்தி
பேசும் அழகுதமிழ்.....
தரையில் விட்டதில்லை ....
யாரைப் பார்த்தும்
சிரிக்கலாம் .....
நிலா காட்டி சோறு ....
இரவு தாலாட்டு ......
ஊசி இல்லாத மருத்துவம் .....
அதிக சிந்திக்காத மூளை ...
வெட்கப்படாத
ஆடை நிர்வாணங்கள்......
பாட்டி வடை சுட்ட கதை ....
சுகமில்லாமல் நான்
தூங்கினாலும் ...விழித்திருக்கும்
அம்மா.....
நாளை பற்றி
இல்லாத பயம் .....
.......ச்..ச்ச ........
சின்ன குழந்தையாகவே ....
...இருந்திருக்கலாம் ....ல .....


---சு.அப்துல் ஹக்கீம் .....,திருநெல்வேலி ...

Wednesday, 2 February 2011


அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பேது என்று
அன்றைக்குச் சொல்லிவைத்த பழமொழிகள் எதற்கு?
அடுப்பூதும் வழக்கங்கள் இன்றில்லை! பெண்கள்
அடிமைபோல் அடங்கிவிடும் நிலையுமில்லை இன்று!

அண்ணல்நபி சொல்லிவைத்த அறிவுமொழி உண்டு
“ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கடமை” என்று
கண்ணியத்தைப் பெண்களுக்கு கொடுக்கவேண்டு மென்றால்
கட்டாயம் கல்விகற்க வைத்திடுவீர் நன்று
கற்றவராய்க் கட்டாயம் ஆக்கிடுவீர் நன்று

அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ், பிளாட்டோரூஷோ என்று
அகிலத்து அறிஞர்கள் பட்டியலும் உண்டு!
அறிவான பெண்ணினத்தை உருவாக்க எவரும்
அறவழிகள் கண்டதில்லை; உலகறியும் இன்று!
அறிவுரைகள் சொன்னதில்லை

ஆணுக்குக் கல்வியினைக் கற்பித்தல் கொண்டு
அறிவாளி ஒருவன்தான் உருவாவான் – பெண்ணில்
ஞானத்தை உருவாக்கி அறிவுக்கண் திறந்தால்
நிச்சயமாய் உலகெல்லாம் அறிவொளியால் திகழும்

பெண்ணென்ற சொல்லுக்குப் பேதையென்ப தல்ல!
பெண்ணுக்குள் பூமணமும் பூகம்பமும் உண்டு!
கண்ணுக்குக் கண்ணாகப் பெண்மணியைப் போற்றிக்
கல்வியினை ஊட்டிவைத்தால் பூவுலகே வெல்லும்
கல்விக்கண் திறந்துவைப்பீர் கடமையெனக் கொண்டு

அறிவுதரும் கல்விக்கு ஆண்பெண் எனக் கூறி
அறிவுலகைக் குடத்துக்குள் மறைத்திடவா போறீர்?
அறிந்திடுவீர்! பெண்மைக்குள் பேரறிவும் உண்டு!
அறையுலகில் வெளித்தருவீர் கல்வியினைக் கொண்டு

கல்விக்கு இணையாக எதுவுமில்லை – உலகில்
கற்றோர்க்கு இணையாக எவருமில்லை
செல்வத்துள் சிறந்த செல்வம் கல்வியென்போம் – அதை
சிறியவரும் பெரியவரும் கற்றிடுவோம் கற்றுவெல்வோம்

கற்றவர்கள் பதவிகளில் உயர்ந்து நிற்பார் – கல்வி
கல்லாதார் பலவகையில் தாழ்ந்திருப்பார்!
பெற்றவரும் மற்றவரும் போற்றும் செல்வம் – உலகில்
பெருமைமிகு மாசற்ற கல்விச்செல்வம்.

செல்வத்தைச் செல்வந்தர் சுமக்கிறார்கள் – கல்விச்
செல்வமதோ கற்றவரைச் சுமந்து செல்லும்.
செல்வத்தை மனிதர்களே காக்கின்றார்கள் – கல்விச்
செல்வமதோ மனிதர்களைக் காத்து நிற்கும்.

செல்வத்தால் இழிவுதரும் பகையும் வரும் – கல்விச்
செல்வத்தால் உயர்வுவரும் உறவும்வரும்!
செல்வத்தால் சிலநேரம் உயிரேபோகும் – கல்விச்
செல்வத்தால் உயிரேபோயின் பெயரோ வாழும்.

செல்வத்தால் மடியிலே பயமிருக்கும் – கல்விச்
செல்வத்தால் மனதினிலே பலமிருக்கும்
செல்வத்தில் பொருட்செல்வம் அழியும் செல்வம் – உலகச்
செல்வத்தில் அழியாது கல்விச்செல்வம்.
அள்ள அள்ளக் குறைந்துவிடும் பிறசெல்வம் – கல்வி
அள்ளினாலும் குறையாத பெரும்செல்வம்.
உள்ளத்தை வெள்ளையாக்கும் கல்விச்செல்வம் – இது
உண்மையிலும் உண்மையான உண்மைச்செல்வம்


முதுவைக் க‌விஞ‌ர்
ம‌வ்ல‌வி அல்ஹாஜ்
ஏ. உம‌ர் ஜ‌ஹ்ப‌ர் ஆலிம் பாஜில் ம‌ன்ப‌யீ
( த‌லைவ‌ர், திட‌ல் ப‌ள்ளிவாச‌ல், முதுகுள‌த்தூர் )

Thursday, 27 January 2011


வீடியோப் போஸ்..

வெட்கத்தைப்படம்
பிடித்துக் காட்ட
பெண்கள் கூட்டத்தில்
வெளிச்சம் போட்டுச்
சிரித்துக்கொண்டே
வீடியோக்காரன்!

வெட்கிக்கொண்டே
வெட்கத்தை
வெளியேற்றிக் கொண்டே
முகம் காட்டும்
அகம் கறுத்த மங்கைகள்!

மலறும் முகம்மணவாளனுக்காக
வாசம் வீசுவதற்கு முன்னே
ரசித்து எடுக்க வீடியோக்காரன்
மணவாளியின் அறையில்
குடும்ப அனுமதியுடன்!

தவறிவிழும் தாவணியும்
ஒதுங்கிக் கிடக்கும் முந்தாணியும்
தப்பாமல் ஓரக்கண்ணின்
ஓலி ஓளி நாடாவில்!

விட்டுப்பிரிந்த
உறவுகளை விழிகளில் அடைக்க
திருமண வீடியோக்கள்
வளைகுடா அறைகளில்!

அறிந்தவன் அறியாதவன்
அனைவரும் கண்டுக்களிக்க
அடுத்தவன் விழிகளுக்கு
விருந்துக் கொடுக்க
வெட்கம் கெட்டுப்போன
சமாச்சாரங்களுக்காகச்
சமபந்திப் போஜனம்!


-----------யாசர் அரஃபாத்

Tuesday, 25 January 2011


இறையருட்பா

பாவிக ளானதால் நாமே
பாழ்படப் போவது மாச்சு
நோவினை யாகவே தானே
நோய்களும் கூடுத லாச்சு
மேவிடும் தாகமாய்க் காதல்
மேனியின் மீதிலே யாச்சு
தாவிடும் காமுகத் தீயால்
தாழ்ந்திடும் கேவல மாச்சு

தாயினும் கூடுத லாயே
தானமாய்ப் பேரருள் காட்டும்;
தீயினை தூரமாய்ப் போக்கும்;
தீதினை ஓட்டுத லாக்கும்
ஆய்வினை வான்மறை மூலம்
ஆதியாய்க் கூறுமி றைவா
ஓய்விலா மூச்சிலுன் பேரை
ஓதிட வேண்டிய ருள்வாய்


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

Thursday, 13 January 2011


நாம் நன்றாக இல்லை - காரணம் நாம் ஒன்றாக இல்லை!

நாம் நன்றாக இல்லை - காரணம்
நாம் ஒன்றாக இல்லை!

ஒரே இறை - எத்தனை இயக்கங்கள்!
ஒரே மறை - எத்தனை குழப்பங்கள்!
ஒரே பிறை - எத்தனை பெருநாட்கள்!

மார்க்கம் வலியுறுத்தும் பிரியம்
தெரியவில்லை நமக்கு!
மார்க்கத்தை வைத்தே பிரியத் தெரிகிறது!

மூமீன்கள் கண்ணாடி போன்றவர்கள்!
துவேச கற்களை வீசினோம்!
ஒவ்வொரு திசையிலும் சிதறினோம்!
காலமெல்லாம் நாம் கதறினோம்!

கபருஸ்தானாய் மாறும் ஆப்கானிஸ்தான்!
உணவின்றி மடியும் சோமாலியா!
பற்றி எரியும் பாலஸ்தீனம்!
உயிர்களின் புதைக்குழி காஷ்மீரின் சோகம்!

பாங்கோசை ஒலிக்கின்ற பூமியெங்கும் இரத்தம்
இருந்தும் திருந்தவில்லை நம் சித்தம்!

இஸ்லாமிய இயக்கங்களே! - நீங்கள்
வேற்றுமையில் ஒற்றுமைக்காண வேண்டாம்!
ஒற்றுமையில் வேற்றுமை என்ன? கூறுங்கள்!

இஸ்லாம்தான் பேரியக்கம் என்று
ஓர்குடையின் கீழ்நின்று
இவ்வுலகுக்கு உரக்கச் சொல்லுங்கள்!.

Wednesday, 29 December 2010


பிடித்து போன ஒன்று .........

"
மறதி ...,
பிடித்து போன ஒன்று ......!!!


காவி சாயங்களை
எத்தனை முறை
வெளுத்தாலும் ...
மறந்து போனதால்
மறதி பிடித்து போனது .....,,,!!!!


கார்க்கில்
சிலருக்கு ..மீளாதுயரம்
சிலருக்கு ..நாட்டுப்பற்று
சிலருக்கு ...வரவு ..
சிலருக்கு ...வாழ்க்கை
மறக்க நினைப்பதால்
மறதி பிடித்து போனது .....,!!!

'2G ' அலைவரிசை ..
என்னவென்ற தெரியவில்லை ..
என் போன்ற பாமரனுக்கு
தெரிந்தவனும் ..எதிர்க்க
வில்லை ..
எப்படியும் மறந்து
போய்விடும் என்பதால் ..
மறதி பிடித்து போனது .....,!!


விளையாட்டு கற்று
தந்தது ...
'குழு ஒற்றுமை '..
'போராட்டம் '
'நொடிகளின் அருமை '
'பணம் புரட்டும் ...
மறுபக்கம் ....' -மறுபடியும்
நினைவு படுத்த
விரும்பாதாதல் ..
மறதி பிடித்து போனது .....,


பலவற்றை ..எழுத
நினைத்தும் ..சிலவற்றை
மறந்ததால்...
சில சமயங்களில் ...
இந்த மறதி ..கூட
பிடித்து தான் போகுகிறது ,,,
என்னை போல் .
பலருக்கும் ...."


---சு .அப்துல் ஹக்கீம் ...,திருநெல்வேலி ...

Thursday, 23 December 2010


ஒற்றையடிப்பாதை

கலிமா-
சுவனத்தின் நெற்றியில்
ஆண்டவன் எழுதிய
ஆதி வாசகம் !

புள்ளிகளே இல்லாத
இந்தப்
புனித வாசகம்தான்
ஏகத்துவ மாளிகையை
எல்லோரும் திறக்கின்ற
அதிசயச் சாவி !

கலிமா-
பலதெய்வப் பாஷாணத்
தூசியைத் துடைத்தெறியும்
ஒட்டடைக்கோல் !

கலிமாவின்
உட்பொருளைக் கண்டு
உணர்ந்து கொண்டவரையே
ஞானிகள் என்று
நானிலம் போற்றும் !

கலிமா-
ஆன்மா சுவனத்தை
அடைய நடக்கின்ற
ஒற்றையடிப்பாதை !

கலிமா-
நாத்திகத்தில் தொடங்கி
ஆத்திகத்தில் முடிகிறது !
ஏனம் கழுவிப்
பானம் ஊற்றுவதற்காக !

மனிதக்
கடிதங்களில்
இந்த
முத்திரை
குத்தப்படவில்லைஎன்றால்
ஆண்டவனைச் சென்று
அடையவே முடியாது !
இந்த
ஒளி விளக்கை
ஏந்திக் கொண்டுதான்
இருண்டு கிடக்கும்
ஆன்மக்காட்டில்
ஞானிகளின்
ஒப்பற்ற பயணம்
உள்நோக்கித் தொடர்கிறது !

கலிமாவின்
முன்னிரண்டு வார்த்தைகளை
மொழிந்து விட்டால் மட்டுமே
"தௌஹீது" அங்கே
தரிபட்டு விடாது !
பின்னிரண்டு வார்த்தைகளும்
பேசப்பட்டால்தான்
ஏக இறைக் கொள்கை
ஏற்றுக் கொள்ளப்படும் !

கலிமா-
சுவனத்தில் வேர்விட்டு
இதயத்தில் கிளை பரப்பும்
அதிசய மரம் !

இந்த மரத்தின்
இனிய நிழலில்தான்
ஞானிகளின் தவத்திற்கு
வரமளிக்கப் படுகிறது !

கலிமா-
ஒரு அதிசய ஆடை !
இதை
உடுத்திக் கொண்டால்தான்
ஆன்மா
நிர்வாணம் அடையும் !

முன்னோக்கி ஓடினால்
பந்தயத்தில் அடையலாம்
வெற்றி !
ஆனால்
கலிமாவைப் பற்றி
"நின்றால்" தான்
வெற்றி கிடைக்கும் !

ஈமான் முழுமை பெற்ற
சீமானாய் ஆவதற்கு
கலிமாவில் தான் மனதைக்
கட்டாயம் முதலீடு
செய்ய வேண்டும் !
அப்போதுதான்-
சுவனத்தை இலாபமாய்
சுலபமாய்ப் பெறமுடியும் !
(பீ. எம். கமால், கடையநல்லூர்)

Saturday, 11 December 2010


படைக்கும் படைப்பினம்

(Created creator)

காட்சிகள் இல்லை. காண்பவர் இல்லை.
ஓசைகள் இல்லை. செவிகளும் இல்லை.
ஓவியன் சிந்தையில் எல்லாம் இருந்தன.
ஓவியத் திறமை புதையலாய் இருந்தது.
புதையலின் நாவுகள் ஆசையை பேசிட
உணர்ந்திட்ட ஒவியன் கேட்ட வரம் தந்தான்.

புதையலின் ஆசையால் வான்,புவி வந்தது.
மலை, கடல் வந்தது. மான்,மயில் வந்தது.
புல்லினம் தொடங்கி வானவர் வரையில்
அத்தனை அழகும் அவன் புகழ் சொல்லுது.
ஒருமையின் அர்த்தம் சொல்ல பன்மைகள் வந்தது.

ஓவிய ஆசை உச்சத்தில் சென்றது.
படைக்கும் தன் முகம் பார்த்திட கேட்டது.
‘ஓவியக்’ கண்ணாடி காட்சிக்கு வந்தது.
முத்திரை படைப்பாய் மானுடம் என்றது.

சின்னத் துளியிலே வரைந்திட்ட சித்திரம்.
சித்திரக் கண்ணாடியில் ஓவியன் தரிசனம்.
கவிதைகள் சொல்லுது, காவியம் சொல்லுது
கப்பல்கள் செய்து கடலில் மிதக்குது.
வானில் பறக்குது. வையத்தை ஆளுது.
படைக்கும் படைப்பினம். படைத்தவன் அற்புதம்.
படைக்கும் படைப்புகள். படைத்தவன் புகழ் சொல்லும்.

காட்ட வந்த கண்ணாடி தன் நிலை மறந்தது.
சாட்சியாய் வந்திட்ட சங்கதியும் மறந்தது.
காட்சியில் வந்ததை ‘நான்’, ‘நான்’ என்றது.
தன் புகழ் பாடியே தருக்கி திரியுது.

வானமும், பூமியும்
உன் வசமானது.
சக்தனின் சக்தி நீ.
வித்தகன் வித்தை நீ
உயிர் தரும் வித்தையும் உன்னில் உறங்குது
உயிர் விடும் நாள் முன்பே
உறக்கம் களைந்திடு!.
நன்றி
http://onameen.blogspot.com

Tuesday, 7 December 2010


ஏழ்மை அழகு

திருமணவீடு.

விரிந்த மலர்களாய்

மகிழ்ந்த முகங்கள் .

உறவுகள் - நட்புகள்

புதுப்பிக்கப்படும் உற்சாகம்.

மணமக்களோ இளம்மயக்கத்தில்.

பெரியவர்களோ

வரவேற்பதில் - விசாரிப்புகளில்.

ஓர் ஓரத்தில்

திருமணப்பந்தலின் கால்பிடித்து

ஓடிவிளையாடி ஆடிப்பாடும் சிறுமிகள்.

வண்ணத்துப் பூச்சிகளாய்

வானவில்லை உடுத்தியதுபோல்

புத்துப்புது ஆடையில் அவர்கள்.

ஒருத்தி சொன்னாள்

அடியே நஜீஹா ....

என் டிரஸ் துபாய் மாமா அனுப்பியது

அனார்கலி மாடல்.


பானுசொன்னாள்...

என் டிரஸ் ""லாச்சா''வாக்கும்

இந்திப்பட மாடல்.


நேற்றுதான் கடைக்கே வந்ததாம்

இந்தப் புதுமாடல் டிரஸ் என்று

தன் ஆடைகாட்டி

அனீஸா கர்வப்பட்டாள்.

அங்கே வந்தாள் ஒரு சிறுமி.

தைக்கப்பட்ட அவள் கவுனில்

இரண்டு ஒட்டுக்கள் -

ஏழ்மையின் வடுக்கள்.


ஆயிஷா பாரடி இவள் டிரஸ்ஸை.....

ஒட்டுப்போட்ட புதுமாடல்


கடையில் கூட இப்படிக்கிடைக்காது....

ஷாஹீன் ஏளனமாய்

வார்த்தையால் இடித்தாள்.

சிறுமிகளின் ஆமோதித்தல்...

கைதட்டல்.... ஆரவாரம்.


ஏழைச் சிறுமி

சிறுமைப்பட்டாள்

ஏமாற்றம்-அவமானம்.

இவர்களை கவனித்த

வயதில் பெரியவர்அருகில் வந்தார்.

ஏழைச்சிறுமியின் தலையை

அன்பாய் வருடியபடியே சொன்னார்....


பிள்ளைகளே ! கிள்ளைகளே!

ஏளனம் கூடாது....ஆணவம் ஆகாது.

உங்கள் ஆடைகயளல்லாம்

சினிமா வடித்த மாடல்

நடிகைகள் உடுத்திய மாடல்....

ஆயினும்

இந்தச் சிறுமியின் ஆடை

யாருடை மாடல் அறிவீரா?

சுவனத்தலைவி

சுந்தர ஃபாத்திமா

அணிந்த மாடல்.

அல்லாஹ்வும் அவன் திருத் தூதரும்

அழகென மெச்சிய மாடல் என்று.

சிறுமிகள் மனம் உணர்ந்தனர்

குணம் திருந்தினர்.

ஏழைச் சிறுமியின்

தோளில் கைசேர்த்து

தோழியாகினர்

பேதமற்ற நட்போடு.
-(கலீபா, ஆலிம் புலவர் S.ஹுஸைன் முஹம்மது ஹக்கிய்யுல் காதிரிய் மன்பயீ)

Monday, 6 December 2010


ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்!

ஆண்டுகள் தோறும் ஆறுகள் வரும்போது
ஆறாத ரணமாக எமது உள்ளம்!
இடித்தது என்னவோ பாப்ரிதான்!
நொடிந்து போனது எங்கள் இதயங்களல்லவா?

அடையாள கரசேவைக்கு
அயோக்கியர்களின் அகராதி
கடப்பாறை சேவை என்றது!

புரிந்துக்கொள்ளாத உச்சநீதிமன்றத்தை
தெரிந்தே துச்சமாக்கினர் துரோகிகள்

வீதிகள் தோறும் குருதியின் வாசனை
நாதியற்ற முஸ்லிம் தலைமை
பீதியில் உறைந்தது எம் சமூகம்!

காத்திருந்த நீதி
கதவை சாத்தியது
காவியின் கரங்களில்
நீதியின் சாவிகள் அடைக்கலம் தேடின

கறுப்பு அங்கிக்குள் ஒரு
கருவறுப்பு கச்சிதமாக அரங்கேறியது!
கொலைக்கார கும்பலுக்கு
கலைமாமணி பட்டம்!

இனி அமைதிப் புறாக்கள்
போருக்குத்தான் தூது செல்லும்!

நம்பிக்கையின் மிச்ச மீதி
உச்சநீதிமன்றத்தில்
ஆறுதல் கொள்வதா?
அல்லது ஆத்திரமடைவதா?

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
விலை போனவர்கள் சிலர்
வலை வீசுகின்றனர்

ஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!

உனது வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!

உன் மீது படிந்துபோன நஜீஸுகளை
அகற்றிவிட்டு
சுஜூது செய்வோம் ஒருநாள்!

ஓ எங்கள் பாப்ரி!
நீ வீணர்களின் கோஷம் அல்ல!
வீரமறவர்களின் சுவாசம்!

நாங்கள் நேற்று முளைத்த காளான்களல்ல!
களைத்துப் போக!
நாற்றுக்களை நட்டுவிட்டோம்!
இனி கழனியில்
களைபிடுங்கும் வேலைதான் மிச்சம்!


-ஆயிஷாமைந்தன்

Tuesday, 30 November 2010


உனக்கென்ன மனக் கவலை?

”முதுவைக் கவிஞர்" அல்ஹாஜ் உமர் ஜஹ்பர் பாஜில் மன்பயீ

முற்காலம் தற்காலம் பிற்காலம் என்கின்ற
முக்கால வாழ்வுநிலை வரலாறு கூறுகிற
அற்புதமாம் குர் ஆனே உன்கையில் இருக்கையிலே
அகிலத்தின் வாழ்வினிலே உனக்கென்ன மனக்கவலை?

கால்பதிக்கும் எத்துறையும் கலங்காமல் நீதியுடன்
கண்ணியமாய் வழிநடந்து புண்ணியமாய் ஆவதற்கு
சால்மிகுந்த சங்கைநபி வாழ்வுமுறை உனக்கிருக்க
சாதனைகள் படைப்பதற்கு உனக்கென்ன மனக்கவலை?

பொற்காலம் படைக்கின்ற வாழ்வுகளும் வழிமுறையும்
புகழ்மிக்க அறிவுகளும் ஆன்மீக நெறிமுறையும்
கற்கண்டுச் சுவைபோன்ற பாடங்களும் படிப்பினையும்
கருணை நபி ஹதீஸ்இருக்க உனக்கென்ன மனக்கவலை?

துன்பத்தில் துயரத்தில் இன்பத்தில் இலட்சியத்தில்
தொடராக விளைகின்ற சோதனையில் வேதனையில்
புண்பட்ட மனத்தவரும் பண்பட்டு நடை பயில
புகழ்ஸஹாபி வாழ்விருக்க உனக்கென்ன மனக்கவலை?

உண்ணுகிற உணவுக்கும் உடுத்துகிற உடைகட்கும்
இன்னதுதான் ஆகுமென்றும் இதுவெல்லாம் ஆகாதென்றும்
கண்ணியமாய்ப் பிரித்தெடுத்து சட்டங்கள் சமைத்தெடுக்கும்
ஷரீஅத்தின் தெளிவிருக்க உனக்கென்ன மனக்கவலை?

இருளுக்கு ஒளிவிளக்கு! இல்லார்க்கு அருள்விளக்கு!
இம்மைக்குச் சுடர்விளக்கு! மறுமைக்குத் தொடர்விளக்கு!
அருளுக்கு அருளான இஸ்லாமே இருக்கையிலே
அல்லாஹ்வின் அடியாளே! உனக்கென்ன மனக்கவலை?

நன்றி : குர்ஆனின் குரல் ( நவம்பர் 2010


http://kiliyanur.blogspot.ae/search/label/           thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக